காஸா யுத்தம் இனி மிகக் கொடூரமாக இருக்கும்... பிரதமர் நெதன்யாகு சூளுரை
ஹமாஸ் படைகளை தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கையாக காஸாவில் புதிய தாக்குதல் இருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
வெளியேற்றப்படுவார்கள்
ஆனால் காஸாவை மொத்தமாக கைப்பற்றும் திட்டமா என்ற கேள்விக்கு நெதன்யாகு பதிலளிக்க மறுத்துள்ளார். காஸாவில் உள்ள மக்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி மொத்தமாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் நெதன்யாகு வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன பிரதேசத்தை கைப்பற்றுவது உட்பட காஸாவில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்பொருட்டு இராணுவம் பல்லாயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களை பயன்படுத்த உள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக காஸா பகுதியை இஸ்ரேல் முழுமையான முடக்கியதை அடுத்து மீண்டும் பஞ்சம் தலைதூக்கியுள்ள நிலையில்,
களத்தில் மனிதாபிமான பேரழிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் உதவி அமைப்புகளும் பலமுறை எச்சரித்துள்ள நெருக்கடியான சூழலில் தற்போது காஸாவை மொத்தமாக கைப்பற்ற நெதன்யாகு முடிவெடுத்துள்ளார்.
காஸாவை மொத்தமாக கைப்பற்றுவது, அங்குள்ள மக்களை அவர்களின் பாதுகாப்பு கருதி தெற்கு நோக்கி நகர்த்துவது என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் கவலை
அங்குள்ள மக்களை மொத்தம் வெளியேற்றுவதே முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என இன்னொரு உயர்மட்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார். காஸாவில் இருந்து மொத்த பாலஸ்தீன மக்களையும் வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தை முன்னெடுக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன், மக்கள் தாமாகவே வெளியேற வாய்ப்பளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேலின் இந்த முடிவு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளதுடன் கட்டுப்பாட்டையும் வலியுறுத்தியது.
இஸ்ரேலின் இந்த முடிவு பாலஸ்தீன மக்களுக்கு மேலும் உயிரிழப்புகளையும் துன்பங்களையும் மட்டுமே பரிசளிக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் பதிவு செய்துள்ளது.
இதனிடையே, மார்ச் 18 முதல் காஸா மீது தொடர் தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. பாலஸ்தீனப் பகுதி முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுடன் தரைவழி நடவடிக்கைகளையும் விரிவுபடுத்தியுள்ளது.
காஸாவின் பெரும்பாலான மக்கள் பிரதேசத்தின் வடக்கில் வசித்து வந்தனர், மேலும் கிட்டத்தட்ட அனைவரும் போரின் போது ஒரு முறையாவது இடம்பெயர்ந்துள்ளனர்.
மார்ச் 18 அன்று இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியதிலிருந்து குறைந்தது 2,459 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதனால் போரில் மொத்த இறப்பு எண்ணிக்கை 52,567 ஆக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |