காசா பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
வடக்கு காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனிய குடும்பங்கள் தங்கியிருந்த டார் அல்-அர்கம் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய அண்மைய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 27 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் இந்த துயரச் செய்தியை வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு காசா சிட்டியின் துஃபா மாவட்டத்தில் அமைந்திருந்த இப்பள்ளி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உள்ளூர் மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி சுகாதார அமைச்சகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
டார் அல்-அர்கம் பள்ளி மீதான இந்த கோரத் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக காசாவின் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸால் கண்ணீருடன் தெரிவித்தார்.
அதே சமயம், இரட்டைக் குழந்தைகளை சுமந்திருந்த ஒரு கர்ப்பிணிப் பெண், அவரது கணவர், அவரது சகோதரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரையும் காணவில்லை என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய ராணுவம் பதில்
இந்தத் தாக்குதல் குறித்த அறிக்கைகளுக்கு பதிலளித்த இஸ்ரேல் இராணுவம், காசா நகருக்குள் இருந்த "முக்கியமான பயங்கரவாதிகள் மற்றும் ஹமாஸின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை" தங்கள் படைகள் குறிவைத்ததாகக் கூறியுள்ளது.
இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் மேலும் 97 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |