உக்ரைன் ரயில் நிலைய கொடூர தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷ்ய தளபதி இவர் தான்
உலக மக்களை நடுங்க வைத்த உக்ரைன் ரயில் நிலைய தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷ்ய தளபதியின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை உக்ரைன் தரப்பு வெளியிட்டுள்ளது.
முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் திரண்டிருந்த ரயில் நிலையம் மீது ரஷ்ய துருப்புகள் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது. குறித்த கொடூர தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 300கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கேப்டன் ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ் உத்தரவிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அப்பாவி பொதுமக்கள் மீது ஏவப்பட்ட அந்த ஏவுகணையில் குழந்தைகளுக்காக என ரஷ்ய வீரர்கள் குறிப்பிட்டிருந்ததும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி டுவோர்னிகோவ்வை பொறுத்தமட்டில், சிரியாவில் பெரும் சேதங்களை ஏற்படுத்த காரணமாகவர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த நேரம் அந்த ரயில் நிலையத்தில் சுமார் 4,000 பேர் கூடியிருந்ததாக நகர மேயர் மதிப்பிட்டுள்ள நிலையில், இது பொதுமக்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும், குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே, ரஷ்யா தொடர்பில் மிகக் கடுமையான நடவடிக்கை சர்வதேச நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ஏதேனும் தாமதம் அல்லது மறுப்பு தெரிவிப்பது என்பது, தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் எங்களை விட ரஷ்ய தலைமைக்கு உதவ விரும்புகிறார்கள் என்று அர்த்தம் எனவும் ஜெலென்ஸ்கி காட்டமாக விமர்சித்துள்ளார்.