வெளிநாடொன்றில் 11 இந்தியர்கள் சடலமாக மீட்பு: கடும் சோகத்தை உருவாக்கியுள்ள செய்தி
ஜார்ஜியா நாட்டில், ஹொட்டல் ஒன்றில் வெலை செய்துவந்த 11 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
11 இந்தியர்கள் சடலமாக மீட்பு
முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவிலுள்ள Gudauri எனுமிடத்தில் ஒரு இந்திய உணவகம் அமைந்துள்ளது.
அதில் வேலை செய்துவந்த 11 இந்தியர்களும், ஜார்ஜியா நாட்டவர் ஒருவரும், உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலுள்ள அறைகளில் தங்கியிருந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த வாரம் அவர்கள் அனைவரும் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.
எதனால் இந்த உயிரிழப்புகள்?
உயிரிழந்த யாருடைய உடலிலும் எந்த காயங்களும் இல்லை, அவர்கள் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை. தூக்கத்திலேயே அவர்கள் உயிர் பிரிந்துள்ளது.
ஆக, அவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த பணியாளர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கருகிலுள்ள ஒரு அறையில், ஜெனரேட்டர் ஒன்று இருந்துள்ளது.
இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 13ஆம் திகதி, மின்சாரம் தடைபட்டதால், இரவில் யாரோ ஜெனரேட்டரை இயக்கியுள்ளார்கள்.
ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு, இந்த பணியாளர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்ததால், அதை சுவாசித்த அவர்கள் அனைவரும் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
11 இந்தியர்கள் உயிரிழந்த விடயம் கடும் சோகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஜார்ஜியாவிலுள்ள இந்திய தூதரகம், உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளைத் துவக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ஜார்ஜியா அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |