80 பந்துகளில் சதம்! இந்திய அணிக்கு எதிரான..ஒருநாள் தொடரை கைப்பற்றி அவுஸ்திரேலியா பதிலடி
அவுஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
ஹர்மன்பிரீத், பிரதிகா அரைசதம்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் ஹர்மன்பிரீத் 70 பந்துகளில் 54 ஓட்டங்களும், பிரதிகா ராவல் 81 பந்துகளில் 52 ஓட்டங்களும் எடுத்தனர். ஆஸ்லேய்க் கார்ட்னர், அன்னாபெல் மற்றும் அலானா கிங் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஹீலி 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, போபே லிட்ச்ஃபீல்டு மற்றும் ஜார்ஜியா வோல் வலுவான கூட்டணி அமைத்தனர். இவர்களது கூட்டணி 94 பந்துகளில் 119 ஓட்டங்கள் குவித்தது.
ஜார்ஜியா வோல் சதம்
அரைசதம் அடித்த போபே லிட்ச்ஃபீல்டு (Phoebe Litchfield) 62 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஜார்ஜியா வோல் (Georgia Voll) 80 பந்துகளில் இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார். அவர் 82 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் குவித்து கஷ்வீ பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து பெத் மூனி (Beth Mooney) 31 ஓட்டங்களும், கார்ட்னர் 19 ஓட்டங்களும் எடுக்க அவுஸ்திரேலியா 36.1 ஓவர்களிலேயே 252 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை வென்று, டி20 தொடரை இழந்ததற்கு அவுஸ்திரேலியா பதிலடி கொடுத்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |