ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கரம்... மாகாண அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி
மத்திய ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில், திரளான மக்கள் கூட்டம் மீது சாரதி ஒருவர் வாகனத்துடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனிக்கும் பெருந்துயரம்
குறித்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய தாக்குதாரி பொலிசாரிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Saxony-Anhalt மாகாண முதல்வர் தெரிவிக்கையில், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இளம் வயது சிறார் என குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் நடந்த Magdeburg பகுதியானது Saxony-Anhalt மாகாணத்தின் தலைநகராகும், பெர்லின் நகரின் மேற்கே 90 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து மாகாண முதல்வர் Reiner Haseloff தெரிவிக்கையில்,
இது மாக்டேபர்க் நகரத்திற்கும், மாகாணத்திற்கும் பொதுவாக ஜேர்மனிக்கும் பெருந்துயரமாகும் என்றார். மட்டுமின்றி, சிலர் பலத்த காயங்கலுடன் தப்பியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிசாரிடம் சிக்கிய தாக்குதல்தாரி சவுதி அரேபிய நாட்டவரான 50 வயதுடைய மருத்துவர் என்றும், ஜேர்மனியில் அவர் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர் என்றும் Haseloff தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத ஆதரவு
மாக்டேபர்க் நகரத்தில் அந்த நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருவதாகவும் முதல்வர் Haseloff தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில், கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் வேறு அசம்பாவிதம் ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்றே அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலின் நோக்கம் இன்னும் விசாரிக்கப்படவில்லை என்றும், தாக்குதல்தாரி மத அடிப்படைவாதி என்பது குறித்து அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சவுதி அரேபியா தரப்பில் இருந்து வெளியான தகவலில், தாக்குதல்தாரி தொடர்பில் ஜேர்மன் அதிகாரிகளிடம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அவரது சமூக ஊடக பக்கத்தில் பயங்கரவாத ஆதரவு கருத்துகளை அவர் பதிவு செய்து வந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனிடையே, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சரகம் குறித்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானதும், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்புக்கு மிக நெருக்கமான பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் ஜேர்மன் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |