OpenAI நிறுவனம் இழப்பீடு வழங்க ஜேர்மனி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிப்புரிமை சட்டங்களை மீறி OpenAI பாடல் வரிகளைப் பயன்படுத்தியதாக ஜேர்மனி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பதிப்புரிமைச் சட்டம்
இசைக்கலைஞர் Herbert Groenemeyerயின் பாடல்கள் உட்பட 9 பாடல்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட உள்ளடக்கத்தில் பதிப்புரிமைச் சட்டங்களை OpenAI நிறுவனம் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
ஜேர்மனி இசை உரிமைகள் சங்கமான GEMA இந்த வழக்கினை தொடர்ந்தது. இதுதொடர்பான வழக்கு ஜேர்மனியின் முனிச்சில் உள்ள பிராந்திய நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது OpenAI அதன் மொழி மாதிரிகள் குறிப்பிட்ட பயிற்சி தரவை சேமிக்கவோ அல்லது நகலெடுக்கவோ இல்லை. மாறாக முழு பயிற்சித் தரவுத் தொகுப்பின் அடிப்படையில் அவர்கள் கற்றுக் கொண்டதை பிரதிபலித்தது என்று வாதிட்டது.
அத்துடன் பயனர் உள்ளீடுகள் எனப்படும் Prompts விளைவாக மட்டுமே வெளியீடு உருவாக்கப்படும் என்பதால், பிரதிவாதிகள் அல்ல, மாறாக அந்தந்த பயனர்தான் அதற்குப் பொறுப்பாவார்கள் என்றும் வாதிட்டது.
தீர்ப்பு
ஆனால், Groenemeyerயின் "Maenner" மற்றும் "Bochum" உட்பட 9 ஜேர்மனி பாடல்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட உள்ளடக்கத்தில் OpenAI நிறுவனம், அதன் AIஐ பயிற்றுவித்ததாக கண்டறிந்தது.
Groenemeyer மற்றும் பிறரின் பாடல்களில் இருந்து பாடல் வரிகளை மீண்டும் உருவாக்குவதன் மூலம் OpenAIயின் சாட்போட் ChatGPT, ஜேர்மனியின் பதிப்புரிமைச் சட்டங்களை மீறியுள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க OpenAI நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |