ஜேர்மனியில் நாளை பொதுத்தேர்தல்: முடிவுகளை அறிய காத்திருக்கும் உலகம்
ஜேர்மனியில் நாளை, அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் ஓலாஃப் ஷோல்ஸ் கட்சி கருத்துக்கணிப்புகளில் பின்தங்கியுள்ள நிலையில், வெற்றி பெறப்போவது யார் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
ஜேர்மனியில் நாளை பொதுத்தேர்தல்
பல ஐரோப்பிய நாடுகளைப்போல, நாட்டை ஆளும் தலைவர் யார் என்பதை நாளை முடிவு செய்ய இருக்கிறார்கள் ஜேர்மன் மக்கள்.
ஜேர்மன் தேர்தல் முடிவுகளைக் குறித்து யாரும் இதுவரை பெரிய அளவில் கவலைப்பட்டதில்லை.
ஆனால், இம்முறை, ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் புலம்பெயர்தலும் அது சார்ந்த விடயங்களும் எனலாம்.
ஆளும் ஓலாஃப் ஷோல்ஸின் கட்சிக்கு மக்களின் ஆதரவு பெருமளவில் குறைந்துள்ள நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு உறுதியாக 20 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடத்தில் இருப்பது, ஃப்ரெட்ரிக் மெர்ஸின் Christian Democratic Union (CDU) கட்சி .
ஆனாலும், ஜேர்மனியைப் பொருத்தவரை, இப்போதைக்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.
CDU கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான AfD கட்சியுடன் ஒரு பிரேரணையை வெற்றிபெற வைப்பதற்காக கைகோர்த்தபோதே நாட்டு மக்கள் அதை எதிர்த்து தெருக்களில் பேரணிகளில் இறங்கினார்கள்.
ஆக, அவ்விரு கட்சிகளும் கைகோர்ப்பதற்கான வாய்ப்பு குறைவே என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக, ஓலாஃப் ஷோல்ஸின் SPD கட்சி, The Greens மற்றும் FDP ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது போலவே, ஃப்ரெட்ரிக் மெர்ஸின் CDU கட்சியும் ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம்.
எல்லாவற்றையும் விட முக்கிய விடயம் என்னவென்றால், ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது கோடீஸ்வர நண்பரான எலான் மஸ்க் ஆகிய இருவரும் ஜேர்மன் மக்கள் மனதைக் கலைக்கும் முயற்சியாக, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான AfD கட்சிக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.
ஆக, என்ன நடக்கப்போகிறது, யார் வெற்றி பெறப்போகிறார், ஜேர்மனியில் எந்தெந்த கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கப்போகின்றன என்பதை அறிய உலகம் காத்திருக்கிறது!
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |