ரஷ்யாவின் மறைமுக எச்சரிக்கை... நாட்டு மக்களுக்கு ஜேர்மனி விடுத்த முக்கிய வேண்டுகோள்
தொழில்நுட்ப கோளாறு என கூறி 60% எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முடக்கியுள்ள நிலையில், எரிவாயு தொடர்பில் பொதுமக்களுக்கு ஜேர்மனி முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Gazprom நிறுவனம் செவ்வாய் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், Nord Stream 1 குழாய் வழியாக ஜேர்மனிக்கு அளிக்கப்படும் எரிவாயுவில் 40% குறைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.
தொழில்நுட்ப கோளாறு என காரணம் கூறியுள்ள ரஷ்யா, அதன் அடுத்த நாள் மேலும் 20% குறைப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது ஜேர்மனிக்கு அளிக்கப்படும் எரிவாயுவில் மொத்தம் 60% குறைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து தங்களுக்கு வரவேண்டிய உதிரி பாகங்கள் பொருளாதார தடை காரணமாக தாமதமாவதாக கூறியே ரஷ்யா ஜேர்மனிக்கான எரிவயுவில் கை வைத்துள்ளது.
ரஷ்யா கூறியுள்ள காரணங்களை ஏற்க மறுத்துள்ள ஜேர்மனி, இலையுதிர் காலம் வரை பராமரிப்பு பணிகளை முன்னெடுத்திருக்கக் கூடாது எனவும், ரஷ்யாவின் இந்த முடிவு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதுடன் விலைகளை உயர்த்துவதற்கான அரசியல் சூதாட்டமாக பார்க்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், பல்கேரியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் மீதும் ரஷ்யா இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் ஜேர்மன் பொருளாதாரத் துறை அமைச்சரும், துணை சேன்ஸலருமான Robert Habeck விமர்சித்துள்ளார்.
மட்டுமின்றி, இந்த இக்கட்டான சூழலில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், எரிவாயு பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, எரிவாயு விநியோகத்தை குறைப்பதற்கான Gazprom நிறுவனத்தின் நடவடிக்கையனது, குளிர்காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான ஜேர்மனிக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு எச்சரிக்கை சமிக்ஞை எனவும் கூறப்படுகிறது.