உக்ரைனுக்காக பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை வாங்கவிருக்கும் ஜேர்மனி
உக்ரைனுக்காக பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான தனது நாட்டின் திட்டம் குறித்து ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் விவாதித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பேட்ரியாட் ஏவுகணை
உக்ரைனுக்கு என அமெரிக்கா சில ஆயுத ஏற்றுமதிகளை இடைநிறுத்திய நிலையில், குறிப்பாக பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு வழங்கும் பொருட்டு ட்ரம்புடன் மெர்ஸ் விவாதித்துள்ளார்.
2022 ல் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவின் மிகக் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள உதவும் வகையில், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை வாங்க ஜேர்மனி தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட்ய்ள்ளது என செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கி, அதை உக்ரைனுக்கு அளிப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 30 பேட்ரியாட் ஏவுகணை உட்பட மிக முக்கியமான சில ஆயுதங்களின் ஏற்றுமதியை ட்ரம்ப் நிர்வாகம் முடக்கியுள்ளது.
இராணுவ உதவி
இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலும் உக்கிரமடைந்துள்ளது. ஏற்கனவே தங்கள் வசமிருந்த 3 பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு ஜேர்மனி அனுப்பியுள்ளது.
இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்க உள்ளார். ஜேர்மனி உக்ரைனுக்கு மொத்தம் 38 பில்லியன் யூரோக்கள் ($43 பில்லியன்) மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்கியுள்ளது.
அத்துடன் ஜேர்மனி தனது நேட்டோ படைப்பிரிவுகளை பலப்படுத்த 25 பில்லியன் யூரோ மதிப்பில் டாங்கிகளை வாங்கவும் திட்டமிட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |