ட்ரம்ப் கொலை முயற்சியை வைத்து நகைச்சுவை செய்த காமெடியன்: ஜேர்மன் நீதிமன்றத்தின் தீர்ப்பு
ட்ரம்ப் கொலை முயற்சியை வைத்து நகைச்சுவை செய்த ஜேர்மன் காமெடியன் ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
நகைச்சுவை செய்த காமெடியன்
கடந்த ஆண்டு அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்தபோது ட்ரம்பை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தாமஸ் (Thomas Matthew Crooks, 20) என்பவர் ட்ரம்பை துப்பாக்கியால் சுட, குண்டு அவரது காதை உரசிக்கொண்டு சென்றது. ஆனால், அந்த அவரது துப்பாக்கிக் குண்டுபட்டு ட்ரம்ப் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், ஜேர்மன் நகைச்சுவையாளரான செபாஸ்டின் (Sebastian Hotz, 29), ட்ரம்ப் கொலை முயற்சியை வைத்து சமூக ஊடகம் ஒன்றில் நகைச்சுவையாக ஒரு கருத்தை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து செபாஸ்டின் மீது சமூக அமைதியைக் கெடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
செபாஸ்டினுடைய இடுகை இனவெறுப்புக் குற்றத்துக்கு சமம் என்று கூறி, அவருக்கு 6,000 யூரோக்கள் அபராதம் விதிக்குமாறு அரசு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்கள்.
ஆனால், செபாஸ்டின் தரப்பில், காமெடியன் ஒருவர் கூறும் விடயத்தை காமெடியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது. அதுதான் தன் வேலை என்றும் செபாஸ்டின் வாதிட்டார்.
ஜேர்மன் நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்நிலையில், அந்த வழக்கிலிருந்து செபாஸ்டினை விடுவித்துள்ளார் நீதிபதி ஆண்ட்ரியா (Judge Andrea Wilms) என்பவர்.
அவர் தனது தீர்ப்பில், செபாஸ்டினுடைய இடுகை ஒரு நகைச்சுவை என்றும், அது நல்ல நகைச்சுவை இல்லையென்றாலும் அது தண்டிக்கப்படக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
தெளிவாக, நகைச்சுவை எனப் புரியும் ஒரு விடயத்தை, வன்முறைக்கான அழைப்பு என யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஜேர்மன் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு செபாஸ்டின் மீதான வழக்கை விமர்சித்திருந்ததுடன், நகைச்சுவை செய்யும் சுதந்திரம் நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என வாதம் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |