சுற்றுலா சென்ற இடத்தில் பலியான ஜேர்மன் குடும்பம்: உயிரைப் பறித்தது இதுதான்
துருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் குடும்பம் ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சுற்றுலா சென்ற இடத்தில் பலியான ஜேர்மன் குடும்பம்
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த Servet (38), அவரது மனைவியான Cigdem Bocek (27), பிள்ளைகள் Masal (3) Kadir Muhammet (6), ஆகியோர், துருக்கி நாட்டிலுள்ள இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று பல இடங்களை சுற்றிப் பார்த்த அந்தக் குடும்பத்தினர், Ortakoy என்னும் பிரபல சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ள தெருவோரக் கடைகளில் விற்கப்படும் பிரபல உணவு வகைகளை சுவைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவர்களுடைய உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படவே, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், முதலில் பிள்ளைகள், அடுத்து தாய், பின்னர் தந்தை என மொத்தக் குடும்பமும் பலியாகிவிட்டது.

உயிரைப் பறித்தது இதுதான்
அவர்கள் பல்வேறு தெருவோரக் கடைகளில் பல உணவுகளை சுவைத்த நிலையில், அந்த உணவுகளில் ஏதோ ஒன்றுதான் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட காரணம் என முதலில் கருதப்பட்டது.
ஆனால், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், Servet குடும்பம் தங்கியிருந்த ஹொட்டலில் சமீபத்தில் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்காக பூச்சி மருந்து அடிக்கப்பட்டுள்ளது.

அந்த பூச்சி மருந்திலுள்ள அலுமினியம் பாஸ்பைடு என்னும் ரசாயனம் ஒரு பயங்கர நச்சுப்பொருளாகும். அதிக அளவில் அதை சுவாசிக்கும்போது அது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
விடயம் என்னவென்றால், அந்த பூச்சி மருந்தை அடித்த ஹொட்டல் ஊழியர்களில் ஒருவர் கூட முறைப்படி பூச்சி மருந்தை பயன்படுத்த உரிமம் பெற்றவர் அல்ல.
ஆக, முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்ட அந்த பூச்சி மருந்தே Servet குடும்பம் பலியாக காரணம் என தற்போது நம்பப்படுகிறது. அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், துருக்கிக்கு சுற்றுலா வந்த ஜேர்மன் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பலியான விடயம் குறித்து அறிந்த துருக்கி ஜனாதிபதியான தய்யிப் எர்டகன், தங்கள் நாட்டு அதிகாரிகள் அந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |