ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த திட்டம் - 5 பேர் கைது
ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் சந்தையை குறிவைத்து வாகனத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 30, 28 மற்றும் 22 வயதுடைய மூன்று மொராக்கோ நாட்டு ஆண்கள், 56 வயதான ஒரு எகிப்தியர் மற்றும் 37 வயதான சிரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, இதில் எகிப்தியர் “அதிகமான மக்களை கொல்ல அல்லது காயப்படுத்த வாகனத் தாக்குதல் நடத்த வேண்டும்” என அழைப்பு விடுத்ததாகவும், மொராக்கோ நாட்டு ஆண்கள் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சிரியாவைச் சேர்ந்தவர், இந்த திட்டத்தை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விசாரணை மற்றும் பாதுகாப்பு
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பவேரியா உள்துறை அமைச்சர் Joachim Herrmann, “எங்கள் பாதுகாப்பு அமைப்புகளின் சிறந்த ஒத்துழைப்பால், ஒரு பெரிய தாக்குதலைத் தடுக்க முடிந்தது” எனக் கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு Dingolfing-Landau பகுதியிலுள்ள சந்தையை குறிவைத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைகள் மிகவும் பிரபலமானவை. 2016-ல் பெர்லின் நகரில் நடந்த வாகனத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததால், கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024-ல் Magdeburg நகரில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் இன்னும் பலரது நினைவில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |