புலம்பெயர் மக்களுக்கான உதவிகளை முடக்க முடிவு: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் அறிவிப்பு
ஜேர்மனியில் தொடரும் கத்திக்குத்து சம்பவங்களை கருத்தில் கொண்டு, சில சட்டவிரோத புலம்பெயர் மக்களுக்கு அளிக்கப்படும் உதவிகளை முடக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர் கொள்கை
ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் Nancy Faeser குறித்த தகவலை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மனியின் மேற்கு நகரமான Solingen பகுதியில், உள்ளூர் விழா ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன் 8 பேர்கள் காயங்களுடன் தப்பினர்.
குறித்த விவகாரத்தில் 26 வயது சிரியா நாட்டவர் சிக்கியதுடன், அந்த நபருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த தாக்குதல் சம்பவமானது ஜேர்மனியின் புலம்பெயர் கொள்கை தொடர்பான பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஞாயிறன்று முக்கியத்துவம் வாய்ந்த மாகாண தேர்தல்கள் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அமைச்சர் நான்சி ஃபேசர் வியாழக்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றை முன்னெடுத்தார்.
அப்போது பேசிய அவர், நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார். அத்துடன், கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாரெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம்
உள்ளூர் விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கூடும் விழாக்களில் கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களை கொண்டுசெல்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தொலைதூர ரயில் சேவைகளிலும் கத்தியை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடம் கத்தி இருக்கிறதா என்பதைத் தேட காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியேற்றப்பட இருக்கும் புலம்பெயர் மக்களுக்கான உதவிகள் இனி மறுக்கப்படும் என்றும் அமைச்சர் ஃபேசர் அறிவித்துள்ளார்.
மேலும், கடந்த பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவுக்கு நாடுகடத்தப்படும் நடவடிக்கையை ஜேர்மனி இனி முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |