கொலைக்குற்றவாளி ஒருவரிடமிருந்து வந்த கடிதங்கள்: அதிர்ச்சியில் ஜேர்மானியர்கள் சிலர்
கொலைக்குற்றவாளி ஒருவர், தனிப்பட்ட முறையில் தங்களுக்குக் கடிதங்கள் எழுதியதைத் தொடர்ந்து, ஜேர்மானியர்கள் சிலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
கொலைக்குற்றவாளி ஒருவரிடமிருந்து வந்த கடிதங்கள்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சவுதி அரேபியாவைச் சேர்ந்தவரான தாலேப் (Taleb A, 50) என்பவர், ஜேர்மனியிலுள்ள Magdeburg என்னுமிடத்திலுள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் கூட்டமாக நின்ற மக்கள் மீது வேண்டுமென்றே தனது காரைக் கொண்டு பயங்கரமாக மோதினார்.
அந்த தாக்குதலின்போது ஒரு ஆறு வயதுக் குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டார்கள், 323 பேர் காயமடைந்தார்கள்.
அந்த சம்பவம் ஜேர்மனியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கியது.
இந்நிலையில், அந்தத் தாக்குதலில் உயிர் தப்பிய சிலருக்கு தாலேப் கடிதங்கள் எழுதியுள்ள விடயம் அவர்களுக்கு திகிலை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலில் உயிர் தப்பியவர்களில் ஐந்து பேருடைய வீடுகளுக்கு தாலேபிடமிருந்து அவர் கைப்பட எழுதிய மன்னிப்புக் கோரும் கடிதங்கள் வந்துள்ளன.
இதில் அதிர்ச்சிக்குக் காரணம் என்னவென்றால், சிறையிலடைக்கப்பட்டுள்ள தாலேபுக்கு, அந்த ஐந்து பேரின் பெயர் மற்றும் முகவரி முதலான விவரங்கள் கிடைத்துள்ளன என்பதுதான்!
ஆக, தங்கள் முகவரி, சிறையிலிருக்கும் கொலைக்குற்றவாளி ஒருவருக்கு எப்படிக் கிடைத்தது என்பது புரியாமல் அவர்கள் அதிர்ச்சியடைய, அவர்களுக்கு மன நல ஆலோசகர்களின் ஆலோசனை அளிக்கப்பட்டுவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |