ஜேர்மனியில் இனி இது கட்டாயம்... மார்ச் மாதம் வரை நீடிக்கும்: அரசாங்கம் முக்கிய முடிவு
ஜேர்மனியில் உலகப்புகழ் பெற்ற Oktoberfest பீர் திருவிழா நெருங்கிவரும் நிலையில், அரசாங்கம் முக்கிய முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த முடிவு விழாவில் பங்கேற்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. ஜேர்மனி அரசாங்கம் எதிர்வரும் அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம் வரையில், பொதுவெளியில் மாஸ்க் கட்டாயம் என்ற நடைமுறையை அமுலுக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது.
மதுபான விடுதிகள், உணவகங்கள், அங்காடிகள் என பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்க உள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்புவதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
ஜேர்மனியில் தற்போதைய நிலவரப்படி, நாள் ஒன்றிற்கு 50 முதல் 130 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. கோடையில் ஏற்பட்ட கொரோனா அலை காரணமாகவே மரண எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, மாஸ்க் கட்டாயம் என்பது பாடசாலைகள் மற்றும் சிறார் பள்ளிகளில் பின்பற்றப்படுமா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
உலகெங்கிலும் இருந்து 6 மில்லியன் மக்கள் வரையில் திரளும் Oktoberfest பீர் திருவிழாவானது கடந்த ஆண்டு மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மாஸ்க் கட்டாயம் என்ற நடைமுறை அமுலுக்கு கொண்டுவருவது விழாவில் கலந்து கொள்ளும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை பெற்றதாக கருதிய 84 மில்லியன் ஜேர்மன் மக்களுக்கு இந்த மாஸ்க் கட்டாயம் என்ற முடிவு கடும் ஏமாற்றத்தை அளிப்பதாக கூறப்படுகிறது.
கோடை காலத்தில் எவ்வித கொரோனா கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் நிம்மதியாக தங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது அக்டோபர் முதம் மார்ச் வரையில் மீண்டும் மாஸ்க் கட்டாயம் என்ற விதி அமுலுக்கு கொண்டுவரப்படும் என்ற தகவல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.