ஜேர்மன் நகரமொன்றில் தண்ணீரை பருகவேண்டாம் என எச்சரிக்கை: தொடரும் நாசவேலையா?
ஜேர்மன் நகரமொன்றில் வாழும் சுமார் 10,000 குடிமக்களுக்கு, குழாயில் வரும் குடிநீரை பருகவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் விநியோகிக்கும் அமைப்பில் நாசவேலை ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற அச்சத்தாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய இரு சம்பவங்கள்
ஜேர்மனியின் Cologne நகரிலுள்ள விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ தளம் ஒன்றில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் குழாய் நீர் வேண்டுமென்றே மாசுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
ஆகவே, குழாய் நீரை குடிக்கவேண்டாம் என எச்சரிக்கப்பட்டதுடன், அந்த ராணுவ தளத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த இடத்துக்கு சற்று தொலைவில் உள்ள Mechernich நகரில் அமைந்துள்ள ராணுவ தளம் ஒன்றிற்கு தண்ணீர் விநியோகிக்கும் அமைப்பிலும் நாசவேலை ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, குழாய் நீரை பருகவேண்டாம் என அந்த தண்ணீரை பயன்படுத்தும் சுமார் 10,000 குடிமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அந்த தண்ணீர் விநியோக அமைப்பு அமைந்துள்ள இடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலியில் துவாரம் இடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாலேயே அங்கும் ஏதேனும் நாசவேலை நடந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சில இடங்களில் குழாய் நீரை அருந்த தடை நீக்கப்பட்டாலும், மக்கள் தண்ணீரை கொதிக்கவைத்து பருகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |