முத்தரப்பு சந்திப்பு ஐரோப்பாவில்... முன்மொழிந்த ஜேர்மனி
புடின் - ட்ரம்ப் அலாஸ்கா சந்திப்பு எந்த முடிவும் எட்டாமல் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், ஜெலென்ஸ்கியுடன் ட்ரம்பும் புடினும் ஐரோப்பாவில் சந்திக்க ஜேர்மனியின் சேன்ஸலர் முன்மொழிந்துள்ளார்.
ஜேர்மன் சேன்ஸலர்
அலாஸ்கா சந்திப்பானது உக்ரைன் போர் தொடர்பில் எந்த முடிவையும் எட்டாத நிலையில், முத்தரப்பு சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க ட்ரம்ப் தமது விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அப்படியான ஒரு சந்திப்பு முன்னெடுக்கப்படும் என்றால், அது ஐரோப்பாவில் ஒரு பகுதியில் நடக்கட்டும் என ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் முன்மொழிந்துள்ளார்.
உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்றின் நேர்காணலின் போதே சேன்ஸலர் மெர்ஸ் இதை குறிப்பிட்டுள்ளார். முத்தரப்பு சந்திப்பு எப்போது நடக்கும் என்பது முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ள மெர்ஸ், ஆனால் ஐரோப்பாவில் ஒரு பகுதியில் நடக்க வேண்டும் என தாங்கள் முன்மொழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலாஸ்கா சந்திப்புக்கு முன்னர் ட்ரம்ப் தெரிவிக்கையில், தாமும் ஐரோப்பிய தலைவர்களும் உக்ரைன் விவகாரத்தில் இன்னொரு சந்திப்பு முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும், இந்த முறை அந்த சந்திப்பில் ஜெலென்ஸ்கியும் இடம்பெறுவார் என குறிப்பிட்டிருந்தார்.
உக்ரேனிய சிறார்களை
உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்பாக புடினுடனான அவரது சந்திப்பு தோல்வியடைந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றிய ட்ரம்ப், தற்போது ஒரு முழுமையான சமாதான ஒப்பந்தத்தைப் பெறுவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனிடையே, போரின் போது உக்ரேனிய சிறார்களை பெருமளவில் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருப்பது, ஐரோப்பாவில் அவர் காலடி எடுத்து வைப்பதற்கு ஒரு சவாலாக உள்ளது.
மட்டுமின்றி, இன்னொரு முறை மாஸ்கோவில் சந்திக்கலாம் என ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்திருந்த புடின், ஜெலென்ஸ்கியுடன் ஐரோப்பாவில் சந்திப்புக்கு ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |