அமைதி வாரியத்தில் இணைய அழைப்பு: ட்ரம்புக்கு ஜேர்மனியின் பதில்
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை கட்டியெழுப்புவது முதலான காரணங்களுக்காக அமைதி வாரியம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுவருகிறார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
தனது அமைதி வாரியத்தில் இணைய பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துவருகிறார் ட்ரம்ப்.
ட்ரம்புக்கு ஜேர்மனியின் பதில்
காசாவுக்கான அமைதி வாரியத்தில் இணைவதற்கு, ஜேர்மனிக்கும் அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

ஏற்கனவே பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், ட்ரம்பின் அழைப்பை நிராகரித்த விடயம் ட்ரம்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சற்று ஜாக்கிரதையாகவே ட்ரம்புக்கு பதிலளித்துள்ளது ஜேர்மனி.
அமைதி வாரியத்தில் இணைய ஜேர்மனிக்கு அழைப்பு விடுத்ததற்கு நாங்கள் நன்றி செலுத்திக்கொள்கிறோம் என்று கூறியுள்ள ஜேர்மனி அரசின் செய்தித்தொடர்பாளரான ஸ்டீஃபன் கொர்நேலியஸ் (Steffen Cornelius), உலகில் அமைதி நிலவவேண்டும் என்னும் கருத்தை நாங்களும் கொண்டிருக்கிறோம் என்றும், காசாவில் நல்லது நடப்பதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஜேர்மனியின் விருப்பமுமாகும் என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், அமைதி வாரியத்தில் இணைய அழைப்பு விடுக்கப்பட்ட சில நாடுகளைப் போலவே, போர்களுக்கான தீர்வுக்கு என வரும்போது, சர்வதேச அமைதிக்கான இறுதி முடிவு ஐக்கிய நாடுகள் சபையின் கையில்தான் என்னும் தனது கருத்தை வலியுறுத்தவும் ஜேர்மனி தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |