ஜேர்மனியில் மூன்று பேரை கொலை செய்ததாக தேடப்பட்டுவந்த நபர்: ஏமாற்றமளிக்கும் தகவல்
ஜேர்மனியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை கொலை செய்ததாக தேடப்பட்டுவந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டறிவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
வீடொன்றிலிருந்து வந்த அவசர அழைப்பு
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, அதிகாலை, ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்திலுள்ள Weitefeld என்னும் நகரத்திலுள்ள ஒரு வீட்டிலிருந்து பெண்ணொருவர் அவசர உதவி கோரி பொலிசாரை அழைத்துள்ளார்.
அதிகாலை 3.45 மணியளவில் வீட்டில் அடிதடி நடப்பதாகக் கூறி அந்தப் பெண் அழைத்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்தனர்.
அவர்கள் அங்கு சென்றடைந்தபோது, அந்த வீட்டுக்குள், 47 வயதுடைய ஒரு ஆணும், 44 வயதுடைய ஒரு பெண்ணும், 16 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துகிடந்துள்ளார்கள்.
அவர்களில் அந்த 44 வயதுடைய பெண்தான் பொலிசாரை அழைத்துள்ளார். ஆனால், பொலிசார் வரும் முன் அவர் உயிரிழந்துள்ளார்.
அவர்கள் கணவனும் மனைவியும் என்றும், அந்த இளைஞர் அவர்களுடைய மகன் என்பதும் பின்னர் தெரியவந்தது.
இதற்கிடையில், பொலிசார் அங்கு வரும்போது அந்த பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பொலிசார் தீவிரமாகத் தேடிவந்தார்கள்.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், தேடப்பட்டுவந்த அந்த நபர் தற்போது Weitefeld நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அதுவும், அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அவர் உயிரிழந்து பல நாட்களாகியிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
இதற்கிடையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால், அந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டறிவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |