ஜேர்மனியில் 4 லட்சத்தை கடந்த வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை
ஜேர்மனியில் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
ஜேர்மனியின் உயர்கல்வி துறையில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2024-25 கல்வியாண்டில் மொத்தம் 4,02,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகம். குறிப்பாக, 1,16,600 புதிய மாணவர்கள் சேர்க்கை பெற்றிருப்பது சாதனை எனக் கருதப்படுகிறது.

இந்த வளர்ச்சி, ஜேர்மன் அரசு மேற்கொண்ட சர்வதேசமயமாக்கல் முயற்சிகளின் விளைவாகும்.
ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் அதிகரித்துள்ளன.
2025 கோடைக்காலத்தில், சுமார் 2,400 ஆங்கில பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 420 பட்டப்படிப்பு மற்றும் 1,930 முதுநிலை படிப்புகள் அடங்கும்.
மாணவர்கள் அதிகம் தெரிவு செய்யும் துறை பொறியியல் (43%) ஆகும். அதன்பின் பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக அறிவியல் (25%) துறைகள் வருகின்றன. முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு 26 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகும்.
அதிக மாணவர்கள் வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 59,000 இந்திய மாணவர்கள் தற்போது ஜேர்மனியில் கல்வி கற்கின்றனர்.
இது சீனாவை (38,600) விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஆசிய-பசிபிக் பிராந்தியம் மொத்த சேர்க்கையில் 33 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது, வட ஆப்பிரிக்கா 19.3 சதவீதம் மற்றும் சஹாரா தெற்குப் பகுதி 5.4 சதவீதம் ஆகும்.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ஜேர்மனி திறந்த கொள்கையால் உலகளாவிய மாணவர்களை ஈர்த்து வருகிறது. இதனால், ஜேர்மனியின் உயர்கல்வி துறை சர்வதேச அளவில் வலுவடைந்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |