உக்ரைன் போரில் ஜேர்மனியின் முடிவால் உருவாகியுள்ள பிரச்சினை...
இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட உக்ரைன் போர் இப்போதைக்கு முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை. பின்வாங்க உக்ரைனும் தயாரில்லை, ஒரு முடிவுகாணும்வரை போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் தயாரில்லை.
ஆக, போர் தொடர்ந்துகொண்டே செல்கிறது. அப்பாவி உயிர்கள் பலியாகிக்கொண்டே இருக்கின்றன...
ஜேர்மனியின் முடிவால் உருவாகியுள்ள பிரச்சினை
போரில் உக்ரைனுக்கு உதவ பல்வேறு நாடுகள் தங்களாலான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
அவற்றில் ஒன்று, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது.
ஆனால், ஜேர்மனி மட்டும் ஆரம்பத்திலிருந்தே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டிவருகிறது.
தான் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கத் தயங்கும் நிலையில், தற்போது ஜேர்மனியால் புதுப் பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.
அதாவது, ஜேர்மன் தயாரிப்பான Leopard tanks என்னும் போர்வாகனங்கள் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை உக்ரைனுக்கு வழங்க பல நாடுகள் முன்வந்துள்ளன.
ஆனால், தனது தயாரிப்பான போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுத்தால், அதனால் மூன்றாம் உலகப்போர் உருவாகலாம் என்பதுடன், அது ரஷ்யாவின் கோபத்தைத் தூண்டும் என்றும், அதனால் ஜேர்மனிக்கு பிரச்சினை உருவாகும் என்றும் எண்ணுகிறது ஜேர்மனி.
ஆகவே, மற்ற நாடுகள் ஜேர்மன் தயாரிப்பான Leopard tanks என்னும் போர்வாகனங்களை உக்ரைனுக்கு வழங்க ஜேர்மனி அனுமதி மறுத்துவருகிறது.
ஆகவே, ஜேர்மனி தானும் உக்ரைனுக்கு உதவாமல், உதவ விரும்பும் மற்ற நாடுகளையும் உதவ விடாமல் தடுப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.