கனடாவுக்கு கனவுகளை சுமந்து வந்த இளம்பெண்! வேலைக்கு சென்ற முதல்நாளே சுக்குநூறாக போன பரிதாபம்
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பல்வேறு கனவுகளுடன் வந்த இளம்பெண் தான் வேலைக்கு சென்ற முதல் நாளே பெரிய விபத்தில் சிக்கி மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் கனிகா (23). இவர் physiotherapy தொடர்பான படிப்பை முடித்த நிலையில் கனடாவில் குடியேறி அங்கு பணியாற்ற விரும்பினார்.
அதன்படி ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ரொறன்ரோவுக்கு வந்தடைந்த கனிகா அங்கு கார் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவர்கள் கனிகாவுக்கு உடனடியாக இரண்டு மூளை அறுவை சிகிச்சைகளை செய்தனர். தற்போது அவரின் இடது புறம் செயலிழந்த சூழலில் சிகிச்சை முடிய பல மாதங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து கனிகாவின் மாமா கில் கூறுகையில், கனிகாவின் தாய் பள்ளி ஆசிரியையாகவும், தந்தை அரசு பணியிலும் உள்ளனர். கனிகா விபத்தை சந்தித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் சமீபத்தில் தான் அவர்களுக்கு விசா கிடைத்தது, இதையடுத்து இருவரும் கனடாவுக்கு சென்று மகளை கவனித்து வருகின்றனர்.
கனிகா இந்தாண்டு ஏப்ரலில் தான் தனது படிப்பை முடித்தாள். நல்ல திறமையான பெண்ணான அவர் வெளிநாட்டில் சென்று பணிபுரிய விரும்பினார். இதையடுத்து கனிகாவின் பெற்றோர் தாங்கள் சேமித்து வைத்த மொத்த பணம் மற்றும் மேலும் கடன்களை வாங்கி அவளை கனடாவில் குடியேற்ற ஏற்பாடுகளை செய்தனர்.
கனிகா வேலைக்கு சென்ற முதல் நாளே விபத்தை சந்தித்தாள், அந்த இடத்திலேயே குடும்பத்தின் அனைத்து எதிர்கால திட்டமும் நொறுங்கின. கனடாவில் உள்ள கனிகாவின் நண்பர்கள் பெரிதும் அவருக்கு உதவி வருகின்றனர், அவள் சிகிச்சைக்காக தொடர்ந்து நிதியுதவியை கோரி வருகின்றனர்.
சமீபத்தில் கனிகா சுயநினைவை அடைந்ததில் இருந்தே மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார். விரைவில் அவள் குணமாகி எல்லாம் மாறும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.