இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ: உயிரை மாய்த்த 14 வயது சிறுமி
பெல்ஜியத்தில் கல்லறைத் தோட்டம் ஒன்றில் கூட்டு துஷ்பிரயோகம் தொடர்பில் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெல்ஜியத்தின் Ghent பகுதியில் வைத்து நடந்ததாக கூறப்படும் இந்த தாக்குதல் தொடர்பில், வெளியான வீடியோ காட்சிகளில் இடம்பெற்றுள்ள நபர்களை அடையாளம் கண்டு பொலிசார் ஐவரை கைது செய்துள்ளனர்.
14 வயது சிறுமி தொடர்பில் வெளியான அந்த வீடியோ குறித்து பெல்ஜியம் அரசாங்க பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நீதித்துறை அமைச்சர் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ள ஐவரும் Ghent பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், இதில் மூவர் 14-15 வயதுடையவர்கள் எனவும் இருவர் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Gavere பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, மே 15ம் திகதி தமது நண்பரை சந்திக்கும் பொருட்டு Westerbegraafplaats கல்லறைத் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக சிறுமியின் நண்பருடன் மேலும் நால்வரும் அங்கிருந்துள்ளனர். தொடர்ந்து அந்த ஐவரும் சிறுமியை சீரழித்துள்ளனர்.
சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைதான ஐவரில் சிறுமியின் நண்பரும் ஒருவர், அவரை நம்பியே சிறுமி கல்லறைத் தோட்டத்தில் தனியாக சந்திக்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதானவர்களில் சிலர் பொலிசாரின் கண்காணிப்பில் இருப்பவர்கள் எனவும், சிறுமிக்கு நடந்த துயரம் மன்னிக்க முடியாத குற்றம் எனவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.