மொத்தமாக மூழ்கடித்த வெள்ளம்... இதுவரை 50 உடல்கள் கண்டெடுப்பு: மீட்பு பணிகள் தீவிரம்
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தில் சிக்கி மரணமடைந்த மேலும் 12 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், மரணமடைந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கடந்த வாரம் திடீரென்று பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இப்பகுதியில், கடந்த ஒரு வார காலமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இந்தோ திபத் காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளப்பெருக்கால் சமோலி மாவட்டத்திலுள்ள தபோவன் சுரங்கத்திற்குள் சுமார் 35 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சுரங்கத்தின் அடியில் சுமார் 130 மீற்றர் தொலையில் இன்று ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக சமோலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், சுரங்கத்திலிருந்து யாரேனும் உயிருடன் மீட்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகொப்டர்களும் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, திடீர் வெள்ளத்தால் ரிஷி கங்கா ஆற்றில் கட்டப்பட்டுவந்த நீர் மின்நிலைய கட்டுமானம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானத்தில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர்.
இவர்களை தேடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இந்த நீர்மின் நிலைய கட்டுமானத்தில் பணிபுரிந்து வந்த ஏழு தொழிலாளர்களின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்தனர்.
இன்று மட்டும் 12 பேரின் உடல்களைப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதன் மூலம் உத்தரகண்ட் வெள்ளத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மாயமான 150 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல இதுவரை 23 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உறுப்புகளிலிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, மீட்புப் பணியாளர்கள் இதுவரை 32 உடல்கள் மற்றும் 11 மனித உடல் பாகங்களை முழு மரியாதையுடன் தகனம் செய்துள்ளனர் என்று மீட்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.