ஆட்டு நுரையீரல் வறுவல் செய்து சாப்பிடதுண்டா? அடிக்கடி செய்வீங்க
அசைவ உணவு என்றாலே சட்டென நினைவுக்கு வருவது கோழி இறைச்சி தான்.
ஆனால் அதை தாண்டியும் பல்வேறு சத்துக்களை தருவது ஆட்டு இறைச்சி, இறைச்சியை விடவும் ஆட்டின் மற்ற உறுப்புகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
இந்த பதிவில் ஆட்டு நுரையீரலை சமைக்கும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
ஆட்டு நுரையீரல்- 1
பெரிய வெங்காயம்- 2 (நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி- 1 (சிறிது சிறுதாக நறுக்கியது)
இஞ்சி- பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய்- 2
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
மிளகுத்தூள்- அரை டீஸ்பூன்
மிளகாய்த்துள்- ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஆட்டின் நுரையீரலை சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
2 அல்லது 3 தடவைகள் தண்ணீரில் சுத்தம் செய்த பின்னர், சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் 4 அல்லது 5 விசில் வரை விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
நுரையீரல் நன்றாக வெந்ததும் அதை தனியாக எடுத்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றவும்.
இதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து எண்ணெய் நன்றாக பிரிந்து வரும் போது வேக வைத்த நுரையீரலை சேர்க்கவும்.
சிறிதளவு தண்ணீரை தெளித்துவிட்டு மசாலா வாசனை போகும் வரை வதக்கிவிட்டு கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆட்டு நுரையீரல் வறுவல் தயாராகிவிடும்.