25 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம்: ஆண்டுக்கு 8 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நாய்
டக்கர் பட்ஜின் என்ற கோல்டன் ரெட்ரீவர் வகை சேர்ந்த நாய் ஒன்று தன்னுடைய சமூக செல்வாக்கின் மூலம் ஆண்டுக்கு சுமார் 8 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
ஆண்டு 8 கோடிக்கு மேல் வருமானம்
சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலமான டக்கர் பட்ஜின் என்ற 5 வயதுடைய கோல்டன் ரெட்ரீவர் என்ற வகையை சேர்ந்த நாய் ஒன்று ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை(8.27 கோடி) வருமானமாக ஈட்டுகிறது.
டக்கர் பட்ஜின் தனது இரண்டு வயது முதல் வணிக விளம்பரங்கள் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறது.
30 நிமிடங்கள் கொண்ட ப்ரீ ரோல் பதிவின் மூலம் யூடியூப்பில் 40,000 முதல் 60,000 அமெரிக்க டாலர்களை டக்கர் பட்ஜின் சம்பாதிக்கிறது, அத்துடன் இன்ஸ்டாகிராமில் 3 முதல் 8 பதிவுகளில் 20,000 அமெரிக்க டாலர்கள் வரை டக்கர் பட்ஜின் சம்பாதிப்பதாக அதன் உரிமையாளர் கோர்ட்னி பட்ஜின் தெரிவித்துள்ளார்.
டக்கருக்காக வேலையை விட்ட மைக்
சிவில் பொறியாளரான கோர்ட்னி பட்ஜினின் கணவர் மைக், டக்கர் மற்றும் அதனுடைய மகன் டோட்-ஐ முழுநேரமும் கவனித்துக் கொள்வதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2018 ஆண்டு 8 வார குழந்தையாக இருக்கும் போது டக்கரை இந்த தம்பதி தத்தெடுத்து கொண்டுள்ளனர், இதையடுத்து பனிக்கட்டிகள் உடன் விளையாடும் டக்கரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
டக்கர் பட்ஜின் தற்போது ஒட்டுமொத்தமாக 25 மில்லியன் ரசிகர்களை சமூக ஊடகங்களில் கொண்டுள்ளது. டிக்டாக்கில் 11.1 மில்லியன் ரசிகர்கள், யூடியூப்பில் 5.1 மில்லியன் ரசிகர்கள், பேஸ்புக்கில் 4.3 மில்லியன் ரசிகர்கள், இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் ரசிகர்கள், ட்விட்டரில் 62,400 பின்தொடர்பாளர்களையும் கொண்டுள்ளது.