வெளிநாடு செல்லும் கனவுகளுடன் இருக்கும் மாணவமாணவியருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
முன்பெல்லாம் நம்மவர்கள் படிப்பதற்கானாலும் சரி, பணி செய்வதற்கானாலும் சரி, அதிக அளவில் புலம்பெயர்ந்து செல்ல விரும்பும் நாடு கனடாவாகத்தான் இருந்துவந்துள்ளது.
ஆனால், பெருந்தொற்றுக் காலகட்டத்திற்குப் பிறகு பிரித்தானியா, அவுஸ்திரேலியா முதலான நாடுகள் திறமையுடையோரை தங்கள் நாடுகளுக்கு ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
பிரித்தானியாவைப் பொருத்தவரையில், 2021இல், தகுதியுடைய பட்டதாரிகள், பிரித்தானியாவில் படிப்பை முடித்த பின்னரும் மூன்று ஆண்டுகளுக்கு பிரித்தானியாவிலேயே தங்கும் திட்டத்தை அந்நாடு அறிமுகப்படுத்தியது.
அத்துடன், பிரித்தானியா இந்த மாதத்தில் மிகு திறன் தனிநபர் விசா (High Potential Individual - HPI) ஒன்றை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விசாவின் நோக்கம் அதி திறன் கொண்ட வெளிநாட்டு பல்கலை மாணவர்களை ஈர்ப்பதாகும். அவர்கள் தங்கள் பட்டப்படிப்புக்கு ஏற்ப, பிரித்தானியாவில் தங்கவும், பணி செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பணி செய்வோருக்கு பிரித்தானிய பணி அழைப்போ, ஸ்பான்சரோ அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்த விசா வைத்திருப்போர் தடையின்றி பிரித்தானியாவுக்கு வந்து பணி செய்யலாம், சுய தொழில் செய்யலாம், மேலும் தன்னார்வலராகவும் பணியாற்றலாம்.
இந்நிலையில், பிரித்தானியாவைப் போலவே, அவுஸ்திரேலியாவும் பட்டம் பெறும் மாணவர்களுக்கான ஒரு flexible பணி விசாவை வழங்குகிறது. சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் வரையும், முனைவர் பட்டம் பெறுவதற்காக படிப்பவர்கள் நான்கு ஆண்டுகள் வரையும் அந்த நகரங்களில் தங்கி அங்கு பணி செய்யலாம்.
Adelaide, Perth மற்றும் Canberra ஆகிய நகரங்களில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடம் மற்றும் தாங்கள் தங்கியிருக்கும் நகரம் ஆகியவற்றின் அடிப்படையில் 2 ஆண்டுகள் வரை கூடுதலாக தங்கள் பணி விசாவை நீட்டிப்புச் செய்துகொள்ளலாம்.
இதற்கிடையில், யாரும் எதிர்பாராத ஒரு இடத்திலிருந்தும் கல்விக்கான வாய்ப்புகள் வரத்துவங்கியுள்ளன.
ஆம், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்தல் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகங்களின் சிறப்பு என்னெவென்றால், நீங்கள் பிரித்தானியாவிலோ அமெரிக்காவிலோ இதே பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு ஆகும் செலவைவிட மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் இந்தப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு குறைவான செலவே பிடிக்கும் என்பதுதான்.