Omicron கொரோனா வைரஸ் குறித்து வெளியாகியுள்ள ஒரு ஆறுதலளிக்கும் செய்தி
தென்னாப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், டெல்டா வைரஸை விட Omicron வகை மரபணு மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ், தீவிரம் குறைந்தது என கண்டறியப்பட்டுள்ளது.
முதன்முறையாக உண்மையான கொரோனா நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், Omicron வகை மரபணு மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ், டெல்டா வைரஸைவிட தீவிரம் குறைவான நோயையே உண்டுபண்ணுவது தெரியவந்துள்ளது.
78,000 நோயாளிகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், டெல்டா வைரஸால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட, Omicron வகை கொரோனா வைரஸால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, குறைவாகவே இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள்.
அதாவது, 1,000 பேரில் 101 பேர் டெல்டா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 1,000 பேரில் Omicron வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 38 மட்டுமே.
இந்த கண்டுபிடிப்புகள், Omicron வைரஸ், முந்தைய மரபணு மாற்ற வைரஸ்களைவிட தீவிரம் குறைந்தது என்ற கருத்துக்கு வழிவகுத்துள்ளன. இதைத்தான் தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் தொடர்ந்து பல வாரங்களாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், தென்னாப்பிரிக்காவைப் பொருத்தவரை, சுமார் 70 சதவிகிதம் மக்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். அத்துடன், 23 சதவிகிதத்தினர் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுவிட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.
இந்த கண்டுபிடிப்புகள், பிரித்தானியாவில் முந்தைய கொரோனா அலைகளைவிட Omicron அலை தீவிரம் குறைந்ததாகவே இருக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளன. தென்னாப்பிரிக்காவை ஒப்பிடும்போது, பிரித்தானியா பெருமளவில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி வேறு வழங்கி வருகிறது.
இதே ஆய்வில் மற்றொரு விடயமும் தெரியவந்துள்ளது. அது என்னவென்றால், இரண்டு டோஸ் பைசர் தடுப்பூசி, Omicron வைரஸால் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதிலிருந்து அல்லது உயிரிழப்பதிலிருந்து 70 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பதாக தெரியவந்துள்ள விடயமாகும்.
அதே நேரத்தில், இதே அளவு பைசர் தடுப்பூசி, டெல்டா வைரஸால் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதிலிருந்து அல்லது உயிரிழப்பதிலிருந்து 93 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது.
பல அறிவியலாளர்கள் பயந்தது போல் இல்லாமல், 70 சதவிகிதம் அளவுக்கு பைசர் தடுப்பூசியால் பாதுகாப்பு உள்ளது என்றாலும், மீதம் 30 சதவிகிதத்தினருக்கு தீவிர Omicron தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இது டெல்டா வைரஸை ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகமாகும். அத்துடன், பைசர் தடுப்பூசியால் பெற்ற நோயெதிர்ப்பு சக்தி நாட்பட குறையும்போது, அது 33 சதவிகிதம் மட்டுமே Omicron தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. இதுதான் Omicron வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாகும்.