பல கோடி மதிப்புள்ள பொருட்களுடன் சரக்கு ரயில் மாயம்!
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 1 அன்று MIHAN இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் (ICD) புறப்பட்ட ரயில், அடுத்த நான்கைந்து நாட்களுக்குள் அதன் JNPT இலக்கை அடைந்திருக்க வேண்டும்.
ஆனால், இப்போது கிட்டத்தட்ட 14 நாட்களாகியும், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பொருட்களை நிரப்பிய கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற அந்த ரயில் எந்த இடத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை.
Representative Image
தகவல்களின்படி, PJT1040201 என்ற எண் கொண்ட அந்த ரயில் கடைசியாக கசரா நிலையத்திற்கு அருகிலுள்ள Oombermali ரயில் நிலையத்தில் (நாசிக் மற்றும் கல்யாண் இடையே) காணப்பட்டுள்ளது. ஆனால் இந்திய ரயில்வேயின் சரக்கு இயக்க தகவல் அமைப்பினால் (FOIS) ரயிலின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை மற்றும் அதிகாரிகளுக்கு அந்த ரயிலைப் பற்றி இப்போது எந்த துப்பும் கிடைக்கவில்லை.
FOIS என்பது ரேக்குகளின் நேரடி இயக்கத்தைக் கண்காணிப்பதற்கான கணினிமயமாக்கப்பட்ட அமைப்பாகும்.
கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) தலைமை மேலாளர் சந்தோஷ் குமார் சிங், திங்கள்கிழமை மாலை அதிகாரிகள் ரயிலைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதை உறுதிப்படுத்தினார்.
“சிஸ்டத்தில் ரயிலின் இருப்பிடம் தெரியாததால் ஏதோ பிழை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால், ரயில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை,'' என்றார்.
கான்கோர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயிலைக் கண்டுபிடிக்க கடுமையாக உழைத்து வருவதாகவும், அதை விரைவில் கண்டுபிடிப்போம் என்று நம்புவதாகவும சந்தோஷ் குமார் சிங் கூறினார்.
காணாமல் போன அந்த ரயிலில், ஏற்றுமதி செய்யக்கூடிய தரமான அரிசி, காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களால் நிரப்பப்பட்ட 90 கன்டெய்னர்கள் உள்ளன.
காணாமல் போன சரக்கு ரயில் காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஏற்றுமதியாளர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.