AI தரவு மையம் அமைக்க அனுமதியின்றி 2,50,000 மரங்களை வெட்டிய கூகிள்
google cuts 2,50,000 trees in finland for build ai data center: பின்லாந்தில் AI தரவு மையம் அமைக்க கூகிள் நிறுவனம் அனுமதியின்றி 250,000 மரங்களை வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
250,000 மரங்களை வெட்டிய கூகிள்
தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுக்கான தரவு மையங்களை அமைக்கும் போட்டியில் பல பில்லியன்களை செலவிட்டு வருகின்றன.

கூகிளின் சுமார் 200 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவுக்கான தரவு மையங்களை உருவாக்கும் திட்டத்தில் பின்லாந்திலும் 2 தரவு மையங்களை உருவாக்கி வருகிறது.

ஆனால், தரவு மையங்களை உருவாக்க கூகிள் அங்குள்ள 2,50,000 மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
வடக்கு பின்லாந்தின் கிராமப்புறத்தில் உள்ள முஹோஸ் நகருக்கு அருகிலுள்ள 330 ஹெக்டேர் (815 ஏக்கர்) வனப்பகுதியில் சுமார் 2,50,000 மரங்கள் இருந்தன. இப்போது அவை அனைத்தும் வெட்டப்பட்டு விட்டது.

சுற்றுச்சூழல் கவலைகள் மரங்களை வெட்டுவதையும் தாண்டி, அருகிலுள்ள ஓடைகளில் பழுப்பு நிற நீர் கலப்பதாகவும், மேல் மண் அரிக்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் புகார் அளித்துள்ளனர்.
காடுகள் அழிக்கப்பட்டு விட்டதால், அங்கிருந்த ஓநாய்கள் இடம்பெயர்ந்து அருகிலுள்ள கிராமத்தின் உள்ளே வருவதாகவும், கட்டுமான பணிகள் அதிக இரைச்சலை ஏற்படுத்துவதாகவும் கிராமத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில், நிலத்தை முழுமையாக வெட்டி அகற்றுவதற்கு முன்பு தேவையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை முடிக்கத் தவறியதால், பின்லாந்து உரிமம் மற்றும் மேற்பார்வை ஆணையம் (LVV), முஹோஸ் மற்றும் அங்கிருந்து சுமார் 100 கி.மீ தென்கிழக்கில் உள்ள ஓட்டன்மாக்கி கிராமத்தில் இருக்கும் மற்றொரு தளத்தில் தனது பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துமாறு கூகுளுக்கு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்தச் சூழ்நிலைக்காக மன்னிப்புக் கோரிய கூகிளின் பின்லாந்து நாட்டு மேலாளர் ஆண்டி ஜார்வினென், "அக்காலத்தில் சட்டத்தைப் பற்றி எங்களுக்கு இருந்த சிறந்த புரிதலின் அடிப்படையிலேயே" நிறுவனம் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தரவு மையங்களை மேலும் ஒழுங்குபடுத்தவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக உள்ளூர் சமூகங்களுக்கு இழப்பீடு வழங்கக் கட்டணம் விதிக்கவும் கோரி 93,000க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுபு குறித்து கருத்து தெரிவித்துள்ள SLL என அழைக்கப்படும் ஃபின்னிஷ் இயற்கை பாதுகாப்பு சங்க நிர்வாகக் குழுவின் தலைவரான ஹன்னா ஹால்மீன்பா, "முதலில் என்னால் அதை நம்ப முடியவில்லை, பின்லாந்தில் எந்தவொரு நிறுவனமும் இதுபோலச் செய்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை.
இந்த அமைப்பு பெரிதும் நம்பிக்கையைச் சார்ந்திருந்தது, ஆனால் அதை கூகிள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. அவர்கள் அந்தப் பரந்த நிலப்பரப்பை வாங்கி, அப்படியே அதை வெட்டத் தொடங்கிவிட்டார்கள். இது அப்பட்டமான ஆணவம்" என தெரிவித்துள்ளார்.
இவை சர்வதேச வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யும் சர்வதேச நிறுவனங்கள். மிகக் குறைந்த அளவிலான பெருநிறுவன வரிகளே பின்லாந்திற்குச் செல்கின்றன.
தரவு மையத்தை இயக்குபவரைத் தவிர, மற்றவர்களுக்கு தரவு மையங்களால் இறுதியில் மிகக் குறைந்த நன்மைகளே கிடைக்கின்றன என ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறைத் தலைவர் ஜுஸ்ஸி கங்காஷார்ஜு தெரிவித்துள்ளார்.