வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை! வாட்ஸ் அப் ஆடியோவால் பரபரப்பை ஏற்படுத்திய பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டிருந்த தடகளபயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னையில் தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக தனியார் விளையாட்டு அகாடமி பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீது தடகள சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நாகராஜன் பேசிய வாட்ஸ் அப் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. பயிற்சி வீராங்கனைகளுடன் அவர் பேசிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நாகராஜன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஜாமீன் கோரிய அவரது மனுவையும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.