இலங்கை திரும்பும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச: அமைச்சரவை பேச்சாளர் அறிவிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் தாய் நாட்டிற்கு திரும்புவார் என அந்த நாட்டின் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது ஆர்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு அதனை ஆக்கிரமிப்பும் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றதாகவும், அங்கிருந்தே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியது.
இந்தநிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் இலங்கைக்கு திரும்புவார் என அந்த நாட்டின் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி தற்போது தலைமறைவாக இருப்பதாக தாம் கருத்தவில்லை என்றும், மாறாக கோட்டபய ராஜபக்ச அதிகாரப்பூர்வ நடைமுறைகளுக்காகவே வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருப்பதாகவும் அமைச்சரவையின் வாரந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: அமெரிக்காவில் கட்டுக்குள் வராத பயங்கர காட்டுத்தீ: 6000 பொதுமக்கள் வெளியேற்றம்!
அத்துடன் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை சிங்கப்பூரின் அட்டர்னி ஜெனரல் தடுத்து நிறுத்தி வைப்பது தொடர்பாக தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், சூழ்நிலையின் தேவையை பொறுத்து அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.