காபூலில் இருந்து வெளியேற சொந்த நாட்டு மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் அமெரிக்கா
தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் அமெரிக்கர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கர்கள் முதலில் ஒரு நபருக்கு 2,000 டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வெளியேற்றுவதற்கான செலவாக அரசாங்கத்திற்கு திருப்பித் தருவதாக உறுதியளிக்கும் படிவத்தை நிரப்ப வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் 5,000 முதல் 10,000 அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் எனவும், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவம் முன்னெடுக்கும் விமானங்களில் அவர்கள் வெளியேறுவார்கள் என்றே நம்பப்படுகிறது. அதற்கு முன்னர் வெளியேற்றுவதற்கான செலவை அவர்கள் ஏற்பதாக உறுதி அளிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்த தகவலில், வியாழக்கிழமை நிலவரப்படி ஆகஸ்ட் 14ம் திகதி முதல் சுமார் 7,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் எத்தனை பேர் அமெரிக்கர்கள், அல்லது எத்தனை அமெரிக்க குடிமக்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் 5,000 அமெரிக்க துருப்புகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், காபூல் நகரில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்க அவர்கள் அனுப்பப்படமாட்டார்கள் எனவும், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்தவர்கள் தாலிபான் சோதனைச்சாவடிகளை கடந்து விமான நிலையம் வந்து சேர வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.