தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய சாதனை
தமிழகத்தில் நேற்று முன்தினம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
முதல் நாள் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேர் கல்லூரிகளில் சேர ஆணையை பெற்றனர்.
இந்நிலையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் கலந்தாய்வு நேற்றுதொடங்கியது.
கலந்தாய்வில்பங்கேற்குமாறு 762 பேருக்குஅழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், 739 பேர் பங்கேற்றனர். 541பேருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டது. 3 பிடிஎஸ் இடங்கள் மட்டும் காலியாகவுள்ளன. காத்திருப்போர் பட்டியலில் 198 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.
தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அவருடன் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் வசந்தாமணி ஆகியோர் இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
“அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒடஒதுக்கீட்டின்படி 437 எம்பிபிஎஸ் இடங்கள், 107 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. நாளையும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
30-ம் தேதி முதல் பிப்.7-ம் திகதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது. பிப். 8-ம்தேதி முதல் 3 நாட்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
இறுதி ஒதுக்கீடு ஆணை 11 அல்லது 12-ம் தேதிஅறிவிக்கப்படும். ஒருமுறை இடங்களை தேர்வு செய்தால் நேரடியாக மாற்றம் செய்ய முடியாது. அதேநேரத்தில் இரண்டாவது கலந்தாய்வின் போது, விரும்பும் கல்லூரிகளில் தங்கள் இட ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் இடம் வழங்கப்படும் என்று” தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் படித்து 7.5சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவஇடங்கள் பெறும் மாணவர்களுக்கு படிக்கும் வரை கல்வி, உணவு, உடை, தங்கும் விடுதி போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே பள்ளியில் படித்த மாணவிகள்
திருநெல்வேலி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இசக்கியம்மாள், யாமினி, பிரியாஆகியோர் திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களை பெற்றனர்.
அதேபோல், மதுரை ஈ.வெ.ரா மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் படித்த ராதிகாவுக்கு மதுரையிலும், நான்சிக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்தது.
தரவரிசைப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மகன் பிரகாஷ் ராஜுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.