சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகு சேவை - தமிழ்நாடு அரசு திட்டம்
govt to launch boat service in chennai to puducherry: சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகு சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகு சேவை
சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி ஆகியவை முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன. தற்போது சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாகவே பொதுமக்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகு சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.
இதன் மூலம் கடல்சார் சுற்றுலா மேம்படுவதோடு, கடற்கரையை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா சார்ந்த உள்ளூர் தொழில்களும் கூடுதல் வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்கான பயணிகள் படகு போக்குவரத்து சேவையை இயக்குவதில் உரிய அனுபவம் கொண்ட தகுதியான படகு உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களிடமிருந்து தமிழ்நாடு கடல்சார் வாரியம் விருப்பக் கோரிக்கைகளை வரவேற்கிறது.
இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தப் புள்ளிகளுக்கான இணையதளமான www.tntenders.gov.in என்பதில் விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 1 ஆம் திகதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பக் கோரிக்கைகள் பெறப்பட்ட பிறகு, தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்தல், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிபார்த்தல், மத்திய மாநில அரசுகளிடமிருந்து உரிய அனுமதிகளைப் பெறுதல் போன்ற அடுத்தகட்டப் பணிகள் நடைபெறும்.
அதன் பின்னர், படகு சேவை எப்போது தொடங்கப்படும், எவ்வளவு தூரம், எவ்வளவு கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.