பிரசவத்திற்கு வந்த பெண்ணின் வயிற்றில் கத்தரிகோல் வைத்து தைத்த அரசு மருத்துவர்கள்
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், பிரசவத்திற்கு வந்த பெண்ணின் வயிற்றில் கத்தரிகோலை வைத்து தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் அலட்சியம்
ஆந்திர மாநிலம், எலுரு மாவட்டம் பெடபாடு மண்டலத்தில் உள்ள எஸ்.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னா.
இவர் கடந்த ஏப்ரல் 19ம் திகதி எலுரு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த பின்பு, தனது வீட்டிற்கு சென்றார்.
அப்போது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது அவரது வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ஸ்வப்னாவுக்கு வயிற்று வலி வர ஆரம்பித்தது. அவர், ஆரம்பத்தில் இது ஒரு ஒரு பொதுவான நிகழ்வு என்று நினைத்து, சில மருந்துகளை எடுத்துக் கொண்டார்.
ஆனாலும், 4 மாதங்கள் ஆன பின்பும் வலியில் இருந்து விடுபடாததால், எலுரு மருத்துவமனைக்கு மீண்டும் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவரை விஜயவாடா மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
எக்ஸ்ரேவில் தெரிந்த உண்மை
இதனைத்தொடர்ந்து ,விஜயவாடா மருத்துவமனையில் பெண்ணிற்கு எக்ஸ்ரே உட்பட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது தான் உண்மை தெரிய வந்தது.
அவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில், வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பதை கண்டறிந்தனர். பின்பு, மருத்துவமனை ஊழியர் ஒருவர் தனது சமூக ஊடக கணக்குகளில் எக்ஸ்ரே புகைப்படத்தை வெளியிட்டபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும், விஜயவாடா மருத்துவமனை மருத்துவர்கள் கத்தரிக்கோலை அகற்றியதால் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஏலூர் மாவட்ட ஆட்சியர் பிரசன்னா வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். அவர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சுகாதார அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இதற்குக் காரணமானவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |