நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் புதிய புகைப்படத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமாகத் தெரிந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
கடுமையான கவலைகளை
ஒன்பது மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு தொடர்ச்சியான சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாசா ஊழியர்களுடன் அவர்கள் கைகுலுக்கி வணக்கம் செலுத்தும் புகைப்படங்களை நாசா வெளியிட்டது. தொடர்புடையப் புகைப்படங்களே, தற்போது சுனிதா வில்லியம்ஸின் உடல்நலம் குறித்த கடுமையான கவலைகளை மருத்துவர் நிபுணர்களிடையே எழுப்பியுள்ளது.
குறிப்பாக மருத்துவர்கள் வில்லியம்ஸின் மெல்லிய மணிக்கட்டுகளைக் குறிப்பிட்டுள்ளனர். அது விரைவான எடை இழப்பு, கைகளில் தசைச் சிதைவு மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வில்லியம்ஸின் முன்னும் பின்னும் உள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுள்ள மருத்துவர்கள், குறிப்பிடத்தக்க வகையில் நரைத்த முடி, ஆழமான சுருக்கங்கள் மற்றும் மிகவும் மெலிந்த முகத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், அடுத்த சில நாட்களுக்கு அவர்களால் சுயமாக நடக்க முடியாமல் அவதிப்படலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக, இது சில நாட்கள் அதிகமாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜூன் 5 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டபோது, வில்லியம்ஸும் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்கள் மட்டுமே தங்க வேண்டியிருக்கும் என கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத பல்வேறு சிக்கல்கள் காரணமாக, அவர்களின் பாதுகாப்பு கருதி நாசா அவர்கள் பூமிக்கு திரும்புவதை தாமதப்படுத்தி வந்தது.
உளவியல் பாதிப்பும்
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பூமியில் தரையிறங்கும் வரை அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் கழித்தனர். இரண்டு விண்வெளி வீரர்களும் உடனடியாக ஸ்ட்ரெச்சர்களில் ஏற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெறும் 8 நாட்கள் மட்டுமே தங்கியிருக்க திட்டமிடப்பட்ட நிலையில், 9 மாதங்கள் செலவிட நேர்ந்ததால், உளவியல் பாதிப்பும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாத நிலை என்பதால், அது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
சுனிதா வில்லியம்ஸ் துணிச்சலான முகபாவனையை வெளிப்படுத்தி, விண்வெளியில் இந்த கூடுதல் நேரத்தைக் கழித்ததில் மகிழ்ச்சி அடைவதாக எல்லோரிடமும் கூறினார். ஆனால் ஒரு விண்வெளி காப்ஸ்யூலில் மெதுவான மரணத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு என்பது உளவியல் ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |