ஜனாதிபதி டிரம்புக்கு பெரும் பின்னடைவு: சொந்த கட்சியினரே எதிராக வாக்களிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு எதிராக இரண்டாவது முறையாக கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப்பெற்றுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிரான இந்த வாக்கெடுப்பில் 232 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 197 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
இதனால் அமெரிக்க வரலாற்றில் இரண்டு முறை பதவி நீக்கத் தீர்மானத்தை எதிர்கொண்ட ஒரே ஒரு ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் மாறியுள்ளார்.
ஜனவரி 6 அன்று தமது ஆதரவாளர்கள் கலந்து கொண்ட பேரணியில் பேசிய டொனால்டு டிரம்ப், கலவரத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
டிரம்ப் முன்வைத்த கோரிக்கையை ஏற்றே அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இன்று அவர் தமது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டி கோரிக்கை வைத்த நிலையில், அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும் செனட் சபை உறுப்பினர்களே மீண்டும் ஒரு வக்கெடுப்பினூடே, அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமா என்பது தொடர்பில் முடிவெடுப்பார்கள்.
செனட் சபை கூட்டமானது ஜனவரி 19 அன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னரே அவை கூடும் என்றே கூறப்படுகிறது.ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீதான இரண்டாவது பதவி நீக்கத் தீர்மானத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சுமார் 10 பேர் டிரம்புக்கு எதிராக வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜான்சன்(பிப்ரவரி 1868), பில் கிளிண்டன்(டிசம்பர் 1998), டொனால்ட் டிரம்ப்(டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2021) ஆகியோர்கள் மீதே பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.