அமெரிக்காவில் மறுஆய்வு செய்யப்படும் 19 நாட்டவர்களின் நிரந்தர வதிவிட உரிமம்
பல்லாயிரக்கணக்கான சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களைப் பாதிக்கக்கூடிய ஒரு விரிவான குடியேற்ற பாதுகாப்பு மதிப்பாய்வை ட்ரம்ப் நிர்வாகம் தொடங்க உள்ளது.
நிரந்தர வதிவிட உரிமம்
இதனால், அச்சுறுத்தல் என அடையாளம் காணப்பட்டுள்ள 19 நாடுகளில் இருந்து குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு நிரந்தர வதிவிட உரிமமும் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் இரண்டு தேசிய காவல்படை உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை பாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்தே ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்த உத்தரவை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் இயக்குனர் ஜோசப் பி. எட்லோ பகிரங்கமாக அறிவித்தார். மேலும், இந்த நாட்டையும் அமெரிக்க மக்களையும் பாதுகாப்பது மிக முக்கியமானது,
மேலும் முந்தைய நிர்வாகத்தின் பொறுப்பற்ற மீள்குடியேற்றக் கொள்கைகளின் விலையை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள். அமெரிக்க பாதுகாப்பு என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மறுஆய்வுக்கு உட்பட்ட 19 நாடுகளை அடையாளம் காணும் ஜூன் மாத ஜனாதிபதியின் பிரகடனத்தை ஃபெடரல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மிகவும் தீவிரமான
அதில், ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் உட்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவால், எத்தனை நிரந்தர வதிவிட உரிமம் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த உத்தரவு, ஆட்சியில் இருக்கும் நிர்வாகத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகவும் தீவிரமான குடியேற்ற மறுஆய்வு நடவடிக்கைகளில் ஒன்று என்றே கூறுகின்றனர்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியதன் பின்னர், அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆப்கானிய அகதியிடமும் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ட்ரம்ப் காணொளி ஊடாக கோரிக்கை வைத்துள்ளார்.
அமெரிக்காவை அவர்கள் நேசிக்கவில்லை என்றால், அவர்கள் அமெரிக்காவிற்கு வேண்டாதவர்கள் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தலைநகரில் வன்முறைச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் நிரந்தர வதிவிட மறுஆய்வு தொடர்பான அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |