தாத்தாவின் உடைமையில் இருந்த கையெறி குண்டு: இறுதியில் அழகிய குடும்பத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்
அமெரிக்காவில் கையெறி குண்டு வெடித்ததில் தந்தை ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் 2 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
வெடித்த கையெறி குண்டு
அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தின் டபிள்யூ லேக் ஷோர் டிரைவில்( W Lakeshore Drive) உள்ள வீடு ஒன்றில் சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் வெடிப்பு விபத்து ஒன்று ஏற்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், அங்கு சுயநினைவற்று கிடந்த தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளை கண்டறிந்தனர்.
Sky News
ஆனால் துரதிஷ்டவசமாக தந்தை உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய 2 குழந்தைகளான 17 வயது சிறுவன் மற்றும் 18 வயதுடைய பெண் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழங்கிய தகவலில், கையெறி குண்டின் சிறிய இரும்பு கம்பியை பிடித்து இழுத்து வீட்டில் இருந்த யாரோ விளையாடியதன் மூலம் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தாத்தாவுக்கு சொந்தமான கையெறி குண்டு
விபத்துக்குள்ளான குடும்பம் தாத்தாவின் உடமைகளை பார்த்து கொண்டு இருந்த போது, அவர்களுக்கு இந்த குண்டு கிடைத்துள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் வீட்டை முழுமையாக ஆய்வு செய்த போர்ட்டர் கவுண்டி வெடிகுண்டு குழு, வீட்டில் வேறு எத்தகைய வெடிக்கும் குண்டுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.