இந்திய வம்சாவளிச் சிறுவனைக் கொன்ற கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள பிரித்தானியா
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் வாளால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த சிறுவன் உட்பட பலரைக் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகளை விற்றவர்களுக்கு, பிரித்தானிய அரசு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள விடயம் பாதிக்கப்பட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தவறுதலாக கொல்லப்பட்ட சிறுவன்
கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 29ஆம் திகதி, ரோனன் கந்தா (Ronan Kanda, 16) என்ற பதின்ம வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து வாளால் குத்தப்பட்டான்.
தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான்.
விசாரணையில், சில இளைஞர்களிடம் ஒரு சிறுவன் கடன் வாங்கியிருந்ததாகவும், தவறுதலாக ரோனனை அந்த சிறுவன் என நினைத்து தாங்கள் தாக்கிவிட்டதாகவும் அந்த இளைஞர்கள் கூறியிருந்தார்கள்.
கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள்
இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில், ஆகத்து மாதம் 26ஆம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 23ஆம் திகதிவரை கத்திகளை ஒப்படைப்பவர்களுக்கு கத்தி ஒன்றிற்கு 10 பவுண்டுகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அவ்வகையில், கத்திகளை ஒப்படைத்தவர்களுக்கு மொத்தம் 350,000 பவுண்டுகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், அந்தக் கத்திகளை காய்கறிகள் அல்லது மாமிசம் வெட்டுவது உட்பட வேறு எந்த உருப்படியான விடயத்துக்கும் பயன்படுத்தமுடியாது என கத்திகளை திரும்பப் பெற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, அந்த கத்திகள் கொலை செய்வதற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ளன. ஆக, கத்தி விற்று 5 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகம் லாபம் பெற்ற ஒரு நிறுவனம், இப்போது அந்த கத்திகளை திருப்பிக் கொடுத்தும் ஒரு பெரும் தொகையை பெற்றுள்ளது.
கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்
இத்தகைய கத்திகளால் குறைந்தது ஏழு பேர் வரை கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்தக் கத்திகளை விற்றவர்களுக்கு அரசு பணம் கொடுத்துள்ள விடயம், பாதிக்கப்பட்டவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிச் சிறுவனான ரோனன் கந்தாவின் அக்காவான நிகிதா (24) கூறும்போது, ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டம் நல்லதுதான்.
ஆனால், என் தம்பியைப் போன்றவர்களைக் கொன்றவர்களுக்கு கத்திகளைக் கொடுத்தவர்கள், கத்தி விற்றதால் ஏற்கனவே லாபம் பார்த்துள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் பணம் வழங்கியுள்ளது நியாயம் அல்ல என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |