விமான பயணிகளுக்கு கேட்ட அலறல் சத்தம்: ஏர் கனடா விமானத்தின் சரக்குப் பெட்டிக்குள் சிக்கிய ஊழியர்
ஏர் கனடா ரூஜ் விமானத்தின் சரக்கு பெட்டிக்குள் ஊழியர் ஒருவர் சிக்கிக் கொண்ட சம்பவம் டொராண்டோ விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் சரக்குப் பெட்டிக்குள் சிக்கிக் கொண்ட நபர்
டொராண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரைக்கட்டுப்பாட்டு ஊழியர் ஒருவர் தவறுதலாக ஏர் கனடா ரூஜ்(Air Canada Rouge) விமானத்தின் சரக்குப் பெட்டிக்குள் தவறுதலாக வைத்து பூட்டப்பட்டுள்ளார்.
டிசம்பர் 13ம் திகதி டொராண்டோவிலிருந்து நியூ பிரன்சுவிக்கின் மோன்க்டன் நகருக்கு 184 பயணிகளுடன் பறக்க திட்டமிட்டிருந்த AC1502 Airbus A321 விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஊழியரின் திக் திக் நிமிடங்கள்
ஏர்பஸ் A321 பறப்பதற்கு தயாராக ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது, பயணிகளுக்கு விமானத்தின் தரைப்பகுதியில் இருந்து யாரோ ஒருவர் அலறுவதும், விமானத்தின் அடிப்பகுதியை வேகமாக தட்டுவதும் கேட்டுள்ளது.
அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து கொண்ட விமான ஊழியர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததுடன் விமான இயக்கத்தையும் உடனடியான நிறுத்தினர்.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் விமான ஊழியர் ஒருவர் சரக்குப் பெட்டிக்குள் தவறுதலாக பூட்டப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்ட ஊழியருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
விமானம் தாமதம்
இந்த குளறுபடி காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதுடன் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மதியம் 2 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 30 மணி நேர தாமதத்திற்கு பிறகு அடுத்த நாள் இரவு 8 மணிக்கு மீண்டும் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |