ஐ.நா மன்றத்திற்கு மாற்றாக... ட்ரம்பின் Board of Peace-ல் இணையும் 7 முஸ்லிம் நாடுகள்
சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து உட்பட ஏழு நாடுகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Board of Peace-ல் சேரவிருப்பதாக ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள்
முன்னதாக புதன்கிழமை தனது பங்கேற்பை பகிரங்கமாக உறுதிப்படுத்திய இஸ்ரேலுடன் இந்த 7 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளும் இணைவார்கள்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் குழுவில் சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் அடங்கும்.
இந்த வாரியமானது ஆரம்பத்தில் காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் இரண்டு வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், புனரமைப்புப் பணிகளைக் கண்காணிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டது என்று கருதப்பட்டது.
ஆனால், தற்போது ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு மாற்றாக இந்த வாரியத்தை முன்னெடுத்துச் செல்லவே அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், காஸாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தவும் புனரமைப்புக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தை தாங்கள் உள்ளிட்ட 7 நாடுகள் ஆதரித்ததாக சவுதி அரேபியா கூறியது.
ஆனால், சவுதி அரேபியா உள்ளிட்ட 7 நாடுகள் இணையும் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அந்த அமைப்பு சர்வதேச அளவில் ஆபத்தாக மாறக் கூடும் என குறிப்பிட்டு ஸ்லோவேனியாவின் பிரதமர் ராபர்ட் கோலோப், ட்ரம்பின் அழைப்பைத் தாம் நிராகரித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதுவரை பஹ்ரைன், அல்பேனியா, அர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ஹங்கேரி, கஜகஸ்தான், மொராக்கோ மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் இதில் இணைய ஒப்புக்கொண்டுள்ளன.

இதனிடையே, கனடா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இன்னும் ட்ரம்பின் அழைப்பிற்கு பகிரங்கமாகப் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், வத்திக்கான் கலந்துகொள்வதா வேண்டாமா என்பது குறித்துப் பரிசீலிக்க போப்புக்கு நேரம் தேவைப்படும் என்று வத்திக்கானின் வெளிவிவகாரச் செயலாளரான கார்டினல் பியட்ரோ பரோலின் தெரிவித்தார்.
ட்ரம்பின் Board of Peace-ல் உறுப்பு நாடுகளுக்கு புதுப்பிக்கக்கூடிய மூன்று ஆண்டு பதவிக்காலங்கள் வழங்கப்படுவதோடு, 1 பில்லியன் டொலர் கட்டணம் செலுத்துபவர்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்படும்.
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
சர்வதேசச் சட்டத்தின் கீழ் அமைதியை நிலைநாட்டும் பணிகளைச் செய்வதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாக Board of Peace செயல்படும், அதன் தலைவராக ட்ரம்ப் பணியாற்றுவார்.
Board of Peace-ன் நிர்வாகக் குழுவின் ஏழு உறுப்பினர்களின் பெயர்களை கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகை அறிவித்தது. அவர்களில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோரும் அடங்குவர்.

இந்த நிலையில், சனிக்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், Board of Peace எனப்படும் காஸா நிர்வாகக் குழுவின் அமைப்பு இஸ்ரேலுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதோடு, அது இஸ்ரேலின் கொள்கைக்கு முரணானது என்றும் விமர்சனம் முன்வைத்தது.
மட்டுமின்றி, துருக்கியும் கத்தாரும் Board of Peace-ல் இடம்பெற்றிருப்பதையும் இஸ்ரேல் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தது. ஆனால், தற்போது புதன்கிழமை ட்ரம்பின் Board of Peace-ல் தனது பங்கேற்பை இஸ்ரேல் பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |