உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா
குவாண்டனாமோ விரிகுடா சிறையில் ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு 1 லட்சம் டொலர் செலவாகுவதாக அமெரிக்க செனட்டர் கேரி பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
குவாண்டனாமோ விரிகுடா சிறை
உலகின் கொடூரமான சிறைகளில் ஒன்றாக தென்கிழக்கு கியூபாவில் உள்ள குவாண்டனாமோ விரிகுடா சிறை கருதப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் காலத்தில் இந்த சிறை திறக்கப்பட்டது.
இந்த சிறையானது சுற்றிலும் கடல், மின் வேலி, உயரமான சுவர், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களால் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.
9/11 தாக்குதல் குற்றவாளி போன்ற அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போர் குற்றவாளிகளை இங்கு அடைத்து அடைத்து வைப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.
இந்த சிறையில் ஜன்னல் கூட இல்லாத இருட்டு அறைகளில் கைதிகள் 23 மணி நேரம் அடைக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதாக உலகளவில் கண்டனம் எழுந்தது.
2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை விசாரணைக்கு முன் சிறையில் வைக்கும் லேகன் ரிலே சட்ட மசோதாவில் கையெழுத்திட்டிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
இவர்களை குவாண்டனாமோ விரிகுடா சிறைக்கு அனுப்ப உள்ளதாகவும், அதற்காக 30,000 பேரை அடைத்து வைக்கும் வகையில் சிறையில் வசதியை ஏற்படுத்துமாறு பெண்டகனுக்கு அறிவுறுத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
கைதிக்கு நாளொன்றுக்கு ஆகும் செலவு
இந்நிலையில், குவாண்டனாமோ விரிகுடா சிறையில் ஒரு கைதியை தங்க வைக்க ஒவ்வொரு நாளுக்கும் $1,00,000(இந்திய மதிப்பில் ரூ.85.68 லட்சம்) செலவாகுவதாக அமெரிக்க செனட்டர் கேரி பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் அவர்களை அங்கே சிறிது காலம் வைத்திருக்கிறோம், பின்னர் அவர்களை அமெரிக்காவிற்கு விமானத்தில் திருப்பி அனுப்புகிறோம், அல்லது ஒரு நாளைக்கு $165 செலவில் அவர்களை இங்கேயே வைத்திருக்கலாம். அது ஒருவிதத்தில் மூர்க்கத்தனமானது என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
குவாண்டனாமோ விரிகுடா சிறையில் தற்போது 70 புலம்பெயர்ந்தோரை அடைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |