விமான நிலையத்தினுள் துப்பாக்கியுடன் மர்ம நபர்... பதறியடித்து வெளியேறிய ஆயிரக்கணக்கானோர்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீரென்று துப்பாக்கியுடன் மர்ம நபர் நடமாடுவதாக தகவல் வெளியான நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பதறியடித்து வெளியேறியுள்ளனர்.
குறித்த தள்ளு முள்ளு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு சுமார் 7.50 மணியளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் முனையம் 1ல் துப்பாக்கியுடன் மர்ம நபர் நடமாடுவதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து 7.59 மணிக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அதிகாரிகள் தரப்பு சம்பவப்பகுதிக்கு விரைந்தனர். இதனிடையே சுமார் 300 பயணிகள் முனையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைக்காக அவரை அழைத்துச் செல்வதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்த நபரிடம் இருந்து துப்பாக்கி எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடைபெறவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடுவதாக தகவல் வெளியானதில், பதறியடித்து வெளியேறிய மக்களில் இருவர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.