பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து வெறிச்செயல்: ஐந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்
அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகம் ஒன்றில் புகுந்து ஐவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபருக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேரிலாந்தின் அன்னபோலிஸில் உள்ள Capital Gazette பத்திரிகை அலுவலகத்திலேயே கடந்த 2018ல் இந்த கொலைவெறிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ள Jarrod Ramos என்பவருக்கு ஐந்து ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், பிணையும் மறுத்துள்ளது.
சட்டத்திற்கு உட்பட்டு உச்ச தண்டனையை வழங்கியுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி செய்த குற்றத்திற்கு துளியும் வருத்தம் தெரிவிக்காத நிலையில், அந்த குற்றவாளிக்கு உகந்த தண்டனையை அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Capital Gazette பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் முக்கிய நிர்வாகிகள் ஐவர் கொல்லப்பட்டனர். பழிவாங்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக முடிந்தவரை பலரைக் கொல்ல ராமோஸ் திட்டமிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் குற்றம் சாட்டினர்.
ராமோஸ் தொடர்பில் குறித்த செய்தித்தாள் 2011-ல் அவர் பெற்ற ஒரு பாலியல் துன்புறுத்தல் தண்டனை பற்றிய கதையை வெளியிட்டிருந்தது. இதுவே குறித்த பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து ராமோஸ் தாக்குதல் நடத்த காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பிணையும் மறுக்கப்பட்டுள்ளது.