துப்பாக்கிதாரியின் வெறிச்செயல்... இரு பெண்கள் உட்பட ஐவர் கொலை
அமெரிக்காவின் டென்வர் நகரில் இரு பெண்கள் உட்பட நால்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
டென்வர் நகரில் திங்கட்கிழமை சுமார் 5 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பொலிசார் தகவல் ஏதும் வெளியிட மறுத்துள்ளதுடன், அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக மட்டுமே தெரிவித்துள்ளனர்.
டென்வர் நகரின் மத்தியப்பகுதியில் குறித்த நபர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதுடன் ஆண் ஒருவர் காயங்களுடன் தப்பியுள்ளார்.
தொடர்ந்து வாகனம் ஒன்றில் தப்பிய அந்த துப்பாக்கிதாரி, சீஸ்மான் பூங்கா குடியிருப்பு பகுதியில் ஆண் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளார். இந்த நிலையில் துரத்திச் சென்ற பொலிசார் மீதும் அந்த நபர் தாக்குதல் முன்னெடுத்துள்ளார்.
தொடர்ந்து Lakewood நகருக்குள் நுழைந்த அந்த துப்பாக்கிதாரி நான்காவது நபரை சுட்டுக்கொன்றுள்ளார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பிய அந்த நபர் ஹொட்டல் ஒன்றில் புகுந்து ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பியுள்ளார்.
இதனிடையே, துரத்திச் சென்ற பொலிசார் மீது மீண்டும் தாக்குதலில் ஈடுபடவே, பொலிசார் அந்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதுடன், பொலிசார் உடபட மூவர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
தாக்குதல்தாரி உட்பட மொத்தம் ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி தொடர்பிலும் பொலிசார் விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.