நான்கு பக்கமும் அலறியடித்து ஓடிய மக்கள்... ஜேர்மனியில் பகீர் சம்பவம்
மத்திய ஜேர்மனியில் உள்ள ஆல்டி கடையில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியின் நிதித் தலைநகரான பிராங்பேர்ட்டின் வடகிழக்கில் சுமார் 8,500 பேர் வசிக்கும் நகரமான Schwalmstadt-Treysa என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த கொலைகாரன் திடீரென்று துப்பாக்கியால் தாக்கியுள்ளான. மேலும், தகவல் அறிந்து வந்த பொலிசார் சம்பவப்பகுதியில் விசாரணையை துவக்கியுள்ளதுடன் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தீவிரவாத சம்பவமல்ல எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு நபர் கடைக்குள் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் திடீரென்று அந்த நபர் துப்பாக்கியை உருவி அவளைச் சுட்டுவிட்டு, துப்பாக்கியைத் தன் மீது திருப்பிக் கொண்டு, தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் நான்கு பக்கமும் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். மேலும், வேறு எவருக்கும் காயமேதும் இல்லை எனவும், கொல்லப்பட்ட பெண்மணிக்கு வயது 53 இருக்கலாம் எனவும், அவரை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபருக்கு 58 வயதிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பாவிலேயே கடுமையான துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்டுள்ள நாடு ஜேர்மனி. மட்டுமின்றி துப்பாக்கி தொடர்பான இறப்பு விகிதங்களும் மிகவும் குறைந்து காணப்படுகிறது.
துப்பாக்கி வைத்திருக்கும் உரிமத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும், மேலும் நம்பகத்தன்மை சோதனைக்கு உட்பட வேண்டும், குற்றப் பதிவுகள் சரிபார்க்கப்படும், மட்டுமின்றி தொடர்புடைய நபர் மது அல்லது போதைக்கு அடிமையா, அவருக்கு உளவியல் பாதிப்பு இருக்கிறதா என்ற சோதனைகளும் முன்னெடுக்கப்படும்.
மட்டுமின்றி, ஜேர்மனியில் 25 வயதிற்குட்பட்ட எவரும் துப்பாக்கி உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் முன் உளவியல் பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும் எனபது குறிப்பிடத்தக்கது.