திருமணத்தில் இசையை நிறுத்த படுகொலைகள் செய்த மர்ம நபர்கள் யார்? தலிபான் வெளியிட்ட முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வு ஒன்றில் இசை ஒலிப்பதை நிறுத்த துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை கொன்ற மர்ம நபர்கள் குறித்து தலிபான் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்கார் மாகாணத்தில் நடந்த திருமண நிகழ்வில் இசை ஒலிப்பதை நிறுத்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்கள் தங்களை தலிபான்கள் என காட்டிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தலிபான்கள் போல் தங்களை காட்டிக் கொண்ட துப்பாக்கிதாரிகள், திருமண நிகழ்வில் இசை ஒலிப்பதை நிறுத்துவதற்காக தாக்குதல் நடத்தி குறைந்தது மூன்று பேரைக் கொன்றதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தலிபான் அரசாங்க செய்தித்தொடர்பாளர் Zabihullah Mujahid கூறியதாவது, திருணமத்தில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகிறோம்.
அவர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் சார்பாக செயல்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஷரியா சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
இஸ்லாமிய அதிகாரிகள் என்ற பெயரில் யாரையும் இசை ஒலிப்பதை தடை செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை, அவர்களுக்கு இது நமது கலச்சாரத்தில் இதற்கு அனுமதியில்லை என்பதை புரிய வைக்க மட்டுமே நாம் முயற்சிக்க வேண்டும். அதுதான் சரியான வழி.
யாராவது ஒருவரைக் கொன்றால், அவர்கள் எங்கள் பணியாளர்களாக இருந்தாலும், அது ஒரு குற்றம், நாங்கள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம், அவர்கள் சட்டத்தை சந்திப்பார்கள் என தலிபான் அரசாங்க செய்தித்தொடர்பாளர் Zabihullah Mujahid தெரிவித்துள்ளார்.